இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை பாதுகாக்கும்: ராகுல் காந்தி!

இண்டியா கூட்டணிக்காக அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜம்மு காஷ்மீரின் எதிர்கால அடித்தளத்தை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

ஜம்மு காஷ்மீரில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், மாநிலத்தின் சுயமரியாதைக்கான தேர்தல், மாநில மக்களின் உரிமைக்கான தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து வாக்காளர்களும் தங்கள் வீடுகளை விட்டு அதிக எண்ணிக்கையில் வந்து இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவுக்காக நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜம்மு காஷ்மீரின் எதிர்கால அடித்தளத்தை பாதுகாக்கும், மேலும் உங்கள் உரிமைகளுக்காக போராடும் வலிமையை உங்களுக்கு வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் 28.12% வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூரில் 33.84%, கதுவாவில் 31.78%, சம்பாவில் 31.50%, பந்திப்போராவில் 28.04%, குப்வாராவில் 27.34, ஜம்முவில் 27.15%, பாரமுல்லாவில் 23.02% வாக்குகள் பதிவாகியுள்ளது.