மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி!

விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, விமானங்களின் சேவை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில், வரும் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.1) நடைபெற்றது. மதியம் 1.10 மணி முதல் 1.45 மணி வரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்று ஒத்திகையில் ஈடுபட்டன. இதை மெரினா கடற்கரையில் இருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாளையும் 4-ம் தேதியும் மீண்டும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், இன்று பகல் 1.45 மணி முதல், மாலை 3.15 மணி வரை, ஒன்றரை மணி நேரம் மூடப்பட்டது. இதனால், இந்த நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படும் 15 விமானங்கள், சென்னைக்கு வரும் 10 விமானங்கள் என மொத்தம் 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும், இந்த விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி வரும் 8-ம் தேதி வரை, சென்னை மெரினா கடற்கரை மற்றும் தாம்பரம் விமானப் படைத்தளம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

இதனால், அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்கள் புறப்படுவது, மற்றும் தரையிறங்குவது, விமானப்படை சாகசங்கள் செய்யும் விமானங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரையில், 15 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரையில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலையமும் தற்காலிகமாக அந்த நேரத்தில் மூடப்படுகிறது. எனவே, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, நேரம் மாற்றம் குறித்து உறுதி செய்து கொண்டு, தங்கள் பயணத்தை மேற்கொள்ளும்படி, இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளை அறிவுறுத்தி உள்ளது.