பிரதமர் மோடியுடன் ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் அரசு முறைப் பயணமாக நேற்று (செப். 30) இந்தியா வந்தார். இன்று அவர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நானும் ஆண்ட்ரூ ஹோல்னஸும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். அனைத்து பதற்றங்கள் மற்றும் சர்ச்சைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு தரப்பும் தொடர்ந்து செயல்படும் என்றும் ஒப்புக்கொண்டுள்ளோம்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உட்பட அனைத்து உலக நிறுவனங்களிலும் சீர்திருத்தம் அவசியம் என்பதில் இந்தியாவும் ஜமைக்காவும் ஒருமனதாக உள்ளன. ஜமைக்காவின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா நம்பகமான மற்றும் உறுதியான பங்காளியாக உள்ளது. அது அப்படியே தொடரும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, உயிரி எரிபொருள், கண்டுபிடிப்புகள், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இந்தியா தனது அனுபவத்தை ஜமைக்காவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது. பாதுகாப்புத் துறையில், ஜமைக்காவின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவும், திறன்களை வளர்க்கவும் இந்தியா தயாராக உள்ளது. திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் ஆகியவை இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களாக உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம், கலாச்சார பரிமாற்றம், விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பு என இந்தியா – ஜமைக்கா இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஜமைக்காவின் பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.