“காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி, தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.