அமைச்சர் பொன்முடி பொறுப்பில் இருந்த உயர்கல்வித்துறை மாற்றப்பட்டதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பது காரணம் அல்ல என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் பதவி ஏற்றனர். பொன்முடி, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. 1989க்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்து வந்தவர் பொன்முடி. சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை என முக்கிய துறைகளின் அமைச்சராக வலம் வந்தவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் உயர்கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றத்தில், மூத்த அமைச்சரான பொன்முடியிடம் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வித் துறை பறிக்கப்பட்டு, வனத் துறை அளிக்கப்பட்டது பலருக்கும் ஷாக் தந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்புக்கு முனைவர் கோவி.செழியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொன்முடி இலாகா மாற்றப்பட்டது தொடர்பாக பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
உயர்கல்வித் துறை பொறுப்பை வகிக்கும் பொன்முடிக்கு, அதனுடன் நேரடியாக தொடர்புடைய பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. ஆளுநர் உடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காகவே இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, “அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித்துறை மாற்றப்பட்டு உள்ளதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பது காரணம் அல்ல. உயர்கல்வித்துறை, பின்தங்கிய சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே மாற்றி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், நானும் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கவில்லை. அன்றைய நாளில் எனக்கு வேறு பணிகள் இருந்தன. அதனால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதுகுறித்து அப்போதே பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் கூறிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாகவும், தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று அடைவதை சரிபார்ப்பவராகவும் எங்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருப்பார். அவருடைய பணிகள் நிச்சயம் பாராட்டத் தகுந்ததாக இருக்கும். தான் வாரிசு அடிப்படையில் பதவிக்கு வரவில்லை, பணிகளின் அடிப்படையிலேயே வந்துள்ளேன் என உதயநிதி தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எனது பணிகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மூலவராக முதல்வர் மு.க.ஸ்டாலினும், உற்சவராக உதயநிதியும் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.