தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்று கொண்ட நிலையில் அவரது செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு அரசு துறையின் செயலர்களும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில் சிறை சென்ற செந்தில் பாலாஜி விடுதலையான நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருடன் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் உள்ளிட்ட ஒரு அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணை முதலமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவருக்கான தனி செயலர் யார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தது. துணை முதலமைச்சரின் செயலர் பொறுப்புக்கு, கூடுதல் தலைமைச் செயலர் ரேங்கில் இருக்கும் இருவதை நியமிக்க வேண்டும். அந்த வகையில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் உதயநிதி ஸ்டாலினின் தனி செயலராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த அவர் உதயநிதியின் தனி செயலாளராக நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உதயநிதியின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், உயர் கல்வித் துறை செயலராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் செயலர்களும் ஆணையர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் டான்ஜெட்கோ தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல சமூக நலத்துறை ஆணையராக லில்லி ஐஏஎஸ்-ம், ஜவுளித்துறை இயக்குனராக லலிதாவும், தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவிற்கு கால்நடை மற்றும் மீன்வளத்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல மின்வாரிய தலைவராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கைத்தறித்துரை செயலாளராக அமுதவல்லியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.