தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணைய தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்’ அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆணையத்தின் முந்தைய தலைவர் சென்னை நீதிமன்ற முன்னாள் நீதிபதி P.R. சிவகுமார் கடந்த மே.11ம் தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி S.தமிழ்வாணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்ட்டுள்ள தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.