முதல்வர் இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் இல்லத்தை காலி செய்தார்.

அவர் தனது குடும்பத்துடன் டெல்லியின் ஃபெரோஷா சாலையில் உள்ள பங்களாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அந்த இடம் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் மிட்டலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது அதிகாரபூர்வ பங்களாவில் வந்து தங்குமாறு கெஜ்ரிவாலுக்கு அசோக் மிட்டல் அழைப்பு விடுத்ததின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (அக்.4) டெல்லி முதல்வர் இல்லத்தில் வந்த இலகுரக சரக்கு வாகனம் வந்து சென்றதை பார்க்க முடிந்தது. “கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் அவர், குடியிருக்க வீடு இல்லை என்பதே எனக்கு தெரியும். அதனால் அவரை எனது அதிகாரபூர்வ பங்களாவுக்கு வந்து தங்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். இப்போது அவருடன் நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என அசோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த மாதம் 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மக்கள் தனக்கு மீண்டும் வாக்களித்த பிறகே முதல்வர் பொறுப்பில் அமர்வேன் என அவர் உறுதியேற்றார். அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், டெல்லி அமைச்சர் ஆதிஷி முதல்வர் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.