மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து இருக்கும் நிலையில், இப்போது கூடுதலாக இந்த 5 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

நமது இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ஒவ்வொரு மொழிகளைப் பேசி வருகிறார்கள். இந்த மொழிகளைக் காக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது மத்திய அரசு கூடுதலாக 5 இந்திய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இப்போது மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

தற்போது நமது நாட்டில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு இருந்தன. முதலில் தமிழ் மொழிக்குத் தான் கடந்த 2004ம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது .கடைசியாக 2014இல் ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வங்க மொழி, மராத்தி உள்ளிட்ட மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நீண்ட காலமாகவே கோரிக்கை எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “பெங்காலி/ வங்க மொழிக்கு இந்திய அரசு ஒரு வழியாகச் செம்மொழி அந்தஸ்து வழங்கிவிட்டது இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இதற்காக நாங்கள் தொடர்ந்து முயன்று வந்தோம். இதற்காக மூன்று முக்கிய ஆராய்ச்சி தொகுப்புகளை நாங்கள் சமர்ப்பித்தோம். எங்களை ஆராய்ச்சி தொகுப்புகளை ஏற்று மத்திய அரசு இப்போது வங்க மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது” என்றார்.

ஒரு மொழி செம்மொழி அந்தஸ்து பெற சில தகுதிகள் உள்ளன. அதாவது அதன் உயர் தொன்மை காட்டும் வகையில் 1,500-2,000 வருடப் பழமையான மொழியின் ஆரம்பக்கால நூல்கள் தேவை. பண்டைய இலக்கியங்கள்/ நூல்களின் தொகுப்பு இருக்க வேண்டும். அறிவு நூல்கள், குறிப்பாக உரைநடை நூல்கள் கவிதை, கல்வெட்டு சான்றுகள் இருக்க வேண்டும். இவை அந்த மொழிகளின் தற்போதைய வடிவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். இப்போது புதிதாகச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மொழிகளில் அஸ்ஸாமி, வங்க மொழி மற்றும் மராத்தி ஆகியவை இந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது. அதேநேரம் பாலி மொழி இந்தியாவில் சில பகுதிகளிலும் லாவோஸ், மியான்மார், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் சில பகுதிகளில் பேசப்படுகிறது.