சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 65% தொகையை மத்திய அரசே ஏற்கும்: நிர்மலா சீதாராமன்!

சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்தின் மதிப்பீட்டு செலவில் 65 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் தற்போது மிக முக்கிய பொதுப்போக்குவரத்து அமைப்பாக மாறிவிட்டது. விம்கோ நகர் – விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். விம்கோ நகர் – விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் – பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் தற்போது பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் கிடையாது, விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் என்பதால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால்,மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, மாதவரம் – சிறுசேரி, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம், மாதவரம் – சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் 116 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இதனால் அதற்கான நிதியும் கிடைக்காமல் இருந்தது. இருப்பினும் தமிழக அரசு சார்பில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. சமீபத்தில் டெல்லி சென்று இருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்த போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்து இருந்தார். இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ. 63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2ம் கட்டத்திற்கு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷனவ் தெரிவித்தார். எனினும், மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.7,425 கோடி, தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும் என்று தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்து இருந்தது. இதன்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கவில்லை எனவும் ரூ.7,425 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது என்ற தகவலும் பரவியது.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியில் 65 சதவிகிதத்தை மத்திய அரசே ஏற்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, 63,246 கோடி திட்ட மதிப்பீட்டில் 65 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்கும் எனவும், மத்திய அரசின் பங்கான 7,425 கோடியுடன் சேர்த்து வங்கிகளிடம் இருந்து மாநில அரசு சார்பில் பெறப்படும் கடன் தொகையான 33,593 கோடியையும் மத்திய அரசே ஏற்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.