காங்கிரஸ் நக்சல் கும்பலால் இயக்கப்படுவதாகவும், அந்தக் கட்சியின் ஆபத்தான செயல்திட்டத்தை முறியடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒருநாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று காலை வாஷிம் மாவட்டத்தில் உள்ள ஜெகதாம்பிகை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் அங்கு நடைபெற்ற பேரணியில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்திட்டம் தோல்வியடையும் என்று காங்கிரஸ் நினைக்கின்றது. நல்ல எண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை மக்கள் அனைவரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
டெல்லியில் சமீபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் காங்கிரஸ் பிரமுகராக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இளைஞர்களை போதைப் பழக்கத்துக்கு தள்ளுவதன் மூலம் கிடைக்கும் பணத்திலிருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸின் சிந்தனை ஆரம்பத்திலிருந்தே அந்நியமானது.
பிரிட்டிஷ் ஆட்சியைப் போல், காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினரை தங்களுக்கு சமமாகக் கருதவில்லை. இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் பஞ்சாரா சமூகத்தை இழிவுபடுத்தும் மனப்பான்மையைக் கடைப்பிடித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.