தலித்துகளின் வரலாறு புத்தகங்களில் இருந்து நீக்கப்படுகிறது: ராகுல் காந்தி!

தலித்துகளின் வரலாறு புத்தகங்களில் இருந்து நீக்கப்படுவதாக மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

சத்ரபதி சிவாஜியின் 2,000 கிலோ எடை கொண்ட 20 அடி உயரமுள்ள அந்தச் சிலையை இன்று திறந்து வைத்த ராகுல் காந்தி பேசியதாவது:-

சத்ரபதி சிவாஜி என்ன நினைத்தாரோ அதன்படி நமது அரசியலமைப்பு உருவாகியுள்ளது. அவரின் பெயரை நீங்கள் எடுத்துக் கொண்டால், அவர் நிலைநாட்டிய சித்தாந்தத்தையும் அரசியலமைப்பையும் நீங்கள் மதிக்க வேண்டும். சத்ரபதி சிவாஜி அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்றுள்ளார்.

அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், இடஒதுக்கீட்டின் 50 சதவீத உச்சவரம்பை நீக்குவதற்கும் தான் முன்னுரிமை அளிப்பதாகப் பேசிய ராகுல் காந்தி, பல தலித், ஆதிவாசி, பிற்படுத்த சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இந்தியாவில் உள்ள உயர்மட்ட தனியார் நிறுவனங்கள், ஊடகங்கள், சட்டத்துறை, புலனாய்வு அமைப்புகளின் மூத்த நிர்வாகத் துறைகளில் சேர்க்கப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், “என்னிடம் சிலை வடிவமைத்துக் கொடுத்த சுவப்னில் குமாருக்கு நான் கை கொடுத்த போது அவரது கைகளில் திறமை இருக்கிறது என்பது புரிந்தது. திறமை இருக்கும் கைகளை நம் மக்கள் பின் வரிசையில் உட்கார வைத்துள்ளனர். இது இந்தியாவில் 24 மணி நேரமும் நடந்துகொண்டிருக்கிறது. நான் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வரலாற்றை பள்ளிகளில் ஒருநாளும் படித்ததில்லை. அவர்களின் வரலாறு புத்தககங்களில் இருந்து நீக்கப்படுகிறது. நம்முடைய வரலாறு, வாழுமிடம் குறித்த புரிதல் இல்லாமல் கல்வி என்பது சாத்தியமில்லை” என்று ராகுல் காந்தி பேசினார்.