சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின்போது, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அரசுத் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது:-
மழைநீர் வடிகால்களை சீரமைப்பது, வெள்ளம் வடியும் கால்வாய்களை தூர்வாரும் பணியை வேகப்படுத்துவது என பல்வேறு திட்டப் பணிகளை நம் அரசு மேற்கொண்டது. இன்னும் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், கடந்த ஆண்டு வரலாறு காணாத மழையின்போது மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தினை மனதில் கொண்டு. இந்த மழையை எதிர்கொள்ள நாம் தயாராகிக்கொண்டு இருக்கிறோம். வடகிழக்குப் பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும் என்று தெரிகிறது. அதனால் மழைநீர் வடிகால் பணி, மின்வாரிய கேபிள்களை அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என ஏற்கெனவே செய்து வரும் பணிகளை விரைந்து முடிக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும்வகையில் புதிய பணிகளை எடுப்பதற்கு முன், நாம் ஏற்கெனவே எடுத்து முடிக்காமல் உள்ள பணிகளை செய்து முடிக்கும்படி உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நேற்றுகூட நம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள், நீர் வழிக்கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி என்று மழைக்காக நாம் எடுத்துவரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து எடுத்துக் கூறியிருந்தார்கள்.
தாழ்வான பகுதிகள், மழைக் காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல் நம்மிடம் வார்டு வாரியாக உள்ளன. அதனால் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகள், மக்களை காப்பாற்றி அழைத்து வருவதற்கான படகுகளை ஒரே இடத்தில் வைத்திராமல் அந்தந்த வார்டுகளுக்கு இப்போதே பிரித்து வழங்கி பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
கடந்த மழையின்போது சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விசாரிக்கும்போது மண்டலத்துக்கு ஒரு இடத்தில் உணவு சமைத்து அங்கிருந்து பிரித்து வழங்குதால் இந்தத் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தனர். அந்தத் தாமதத்தை தவிர்க்க, எங்கெல்லாம் மழை நீர் அதிகமாக தேங்குமோ அதற்கு அருகிலேயே சமையற்கூடங்களை அமைத்து சமைத்து வழங்கினால் மக்களுக்கு உரிய நேரத்தில் நம்மால் உணவு வழங்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்க கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடும்போது அவர்கள் கேட்கும் பால் பாக்கெட்டுகளை உடனடியாக வழங்க உரிய அறிவுறுத்தல்களை ஆவின் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 1000 பால் பாக்கெட்டுகள், ஆயிரம் பிரட் பாக்கெட் என்ற அளவில் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கான அறிவுறுத்தல்களை நம் மாநகராட்சி வருவாய் அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டும்.
சென்னையில் அம்பத்தூர், மாதவரம், காக்களூர் ஆகிய இடங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது. கடந்த மழைக் காலத்தில் அந்தப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பால் பாக்கெட்டுகளை அங்கிருந்து வெளியே எடுத்து வருவதில் சிரமம் ஏற்பட்டது. அதுபோன்ற சூழல் ஏற்படாத வகையில் அந்த இடங்களையும் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செல்போன்களும் செயல்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஒருவரை மற்றவர்கள் தொடர்புகொள்ள மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்துவதற்கு வயர்லஸ் போன்களை வழங்கலாமா என்பது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த மழையின்போது, சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தை தவிர்த்திடும் வகையில் தற்போது கூடுதலாக ஆட்களை அமர்த்தி இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதேபோல மரம் வெட்டும் உபகரணங்களை கூடுதலாக இருப்பு வைத்திருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், குழாய் வழியாக வழக்கமாக வழங்கும் மெட்ரோ வாட்டரை வழங்க முடியாத சூழலில், டேங்கர் லாரி மூலம் தாமதமின்றி குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்திருக்கும்போது நம்மால் மின் இணைப்பு வழங்க முடியாது. அதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள EB BOX-களை இப்போதே உயர்த்தி வைப்பதற்கான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் சூழ்ந்துள்ள ஒட்டுமொத்தப் பகுதியும் இருளில் மூழ்கிவிடும்போது, ‘வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டாலும் ஜெனரேட்டர் மூலம் பிரதான சாலைகளிலும் இணைப்புச் சாலைகளிலும் ஃபோகஸ் லைட்களை கட்டி எரிய விடுங்கள்’ என்று கடந்த மழையின்போது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மக்களிடம் பணியாற்றுவதில் நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர்களையும், மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று தானாக முன்வந்து பணியாற்றும் தன்னார்வலர்களையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள், தன்னார்வலர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுக்களை நாம் உருவாக்கலாம். மீட்புப் பணி, உணவுப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளில் அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இயங்கும்படி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும். சிதிலமடைந்த நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், பழமையான சுனாமி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாழும் மக்களை எச்சரிக்கை விடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும்.
மழை நீர் தேங்கும் பகுதிகள், நிவாரண மையங்கள் (Reflief Centres), மோட்டார்கள், படகுகள் உள்பட நம்மிடம் கையிருப்பில் உள்ள உபகரணங்கள், சமையற் கூடங்கள், தன்னார்வலர்கள் குறித்த விவரங்கள்… என ஒட்டுமொத்தத் தகவல்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் நம்முடைய சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையான Integrated Command and Control Centre – ICCC-ஐ மேலும் பலப்படுத்துவது மிக அவசியமாகும். சமூக வலைத்தளங்களில் வரும் மக்களின் கோரிக்கைகள், புகார்கள், அதேபோல மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகள், அவற்றுக்கான தீர்வுகள் என அனைத்தும் ICCC மூலம் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும்.
மழை நேரத்தில் நான் தினமும் அந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து அன்றன்று நடந்தப் பணிகளை ஆய்வு செய்து மறுநாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்துவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘மக்கள் பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் அதிகாரிகளும் நம்முடன் களத்தில் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், ‘அரசாங்கம் நம்முடன் நிற்கிறது. இந்த மழையை சமாளித்துவிடலாம்’ என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் நம் பணிகளை அமைத்துக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள், மழைநீர் வெளியேற்றும் அதிக திறன் கொண்ட மின்விசை பம்புகள், ஜெனரேட்டர்கள், மரம் வெட்டும் இயந்திரங்கள், வெள்ள நிவாரண முகாம்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே சமையல் செய்வதற்கான ஏற்பாடுகள், மின்சாரவாரியத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இரயில்வே மற்றும் இதர சுரங்கப்பாதையில் மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு படகுகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் சென்றடைவதற்கான முன்னெற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.