ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளது நல்ல விஷயம்: ஃபரூக் அப்துல்லா!

இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதானத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பது குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தான் நினைப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்லாமாபாத் செல்ல உள்ள நிலையில், ஃபரூக் அப்துல்லா அதனை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் செல்ல உள்ளது நல்ல விஷயம். வழக்கமாக இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார். ஜெய்சங்கர் செல்வதில் மகிழ்ச்சி. அவருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. எஸ்சிஓ மாநாட்டைத் தாண்டி, வெறுப்பின் மூலமாக அல்லாமல், நட்பின் மூலம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “லெபனான், சிரியா, ஈாரன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் மீது குண்டு போடும் இஸ்ரேலின் நடவடிக்கை தீவிரமானது. நாம் உலகை காக்க வேண்டுமானால் அதற்கு போர் தீர்வல்ல. அப்பாவிகளை போர் கொல்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் மிகப் பெரிய வெற்றியை பெற முடியும். பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் முன்னோக்கிச் செல்லும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.