“சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலில் யாரும் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம் மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தது போலத் தெரிகிறது. இச்சம்பவம் துர்திஷ்டமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் இன்று (அக்.7) செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் கூறியதாவது:-
சென்னை மெரினாவில் ராணுவ வீரர்களின் வான்வெளி சாகசம் வரவேற்கத்தக்கது. அங்கு கூட்ட நெரிசலில் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம், சில நோய்களால் இறந்தது போல் தெரிகிறது. இச்சம்பவம் துர்திஷ்டமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கருத்துக் கணிப்புகளை நான் ஏற்பதில்லை. ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இஸ்ரேல், பாலஸ்தீனம் போரால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் முயற்சிக்கிறார். அதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்கின்றன. ஓராண்டாக போர் நீடித்து வருவது மக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது. போர் நின்றால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஈரானில் உற்பத்தி குறைந்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது அமெரிக்காவில் கச்சா எண்ணெயும், ரஷ்யாவில் எரிவாயும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகவே, கடுமையான விலை உயர்வு இருக்காது. ஈரானில் உற்பத்தி குறைந்தால் சற்றே உயரும்.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முழு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த, கட்சியை வலுப்படுத்த தான் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவோம் என பேசப்படுகிறது. நாங்கள் கட்டுக்கோப்பான திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். இக்கூட்டணி வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.