என்எல்சி பிரச்னைக்கு ஆறு மாதங்களில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்!

என்எல்சி நிர்வாகம் – தொழிலாளர் பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்தும், போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் என்எல்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், இருதரப்புக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையும் நிலுவையில் உள்ளது என்று என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் என்எல்சி தொழிற்சங்கம் சார்பில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் இதுவரையிலும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தம் செய்வது என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்றும் இந்த போராட்டத்தில் ஈடுபடும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “என்எல்சி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள பிரச்னை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு தீர்பாயம் மற்றும் தொழிலாளர் நல நீதிமன்றங்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது வேலை நிறுத்தத்திற்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் தீர்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்எல்சி நிர்வாகம் – தொழிலாளர் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆறு மாதங்களில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கினை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.