திமுக அரசு, பெற்றால் வரி – இறந்தால் வரியை மட்டுமே பாக்கி வைத்துள்ளதாக இன்று திருப்பூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் திருப்பூர் மாநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. வேலம்பாளையத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் புதிய வரிகள் போடவே இல்லை. கொரோனா தாக்குதலின் போதும், புதிய வரிகள் போடாமல் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் செய்யப்பட்டன. ஆனால், திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் கோடிக்கு புதிதாக கடன் வாங்கி வைத்துள்ளனர். இன்றைக்கு, வரி போடாத துறைகளே இல்லை என்ற அளவுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. பெற்றால் வரி – இறந்தால் வரி மட்டும் தான் பாக்கி. இதையும் போட்டுவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் முடிந்தார்கள்.
விலைவாசி ஏற்றத்தின் மூலம் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரி உயர்வை கண்டித்து நடைபெறும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்கிறார்கள். தற்போது உயர்த்தப்பட்ட 6 சதவீத வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வால் பனியன் தொழில் நசிந்துவிட்டது. பனியன் தொழில் அதிபர்கள் மிகப்பெரிய நெருக்கடியை இன்றைக்கு சந்தித்து கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் திமுக அரசு உணராமல், அமெரிக்காவுக்கு சென்று தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக சொல்வது வேடிக்கையாக உள்ளது. இன்றைய திமுக அரசு கார்ப்பரேட் அரசு, வாரிசு அரசு, குடும்ப அரசு தான். உதயநிதியை கடந்து, இன்பநிதியை உயர்த்திப் பிடிக்க தயாராகி விட்டனர் திமுகவினர். இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.