இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு முன்னிலையில் இந்தியா, மாலத்தீவு இடையே ரூ.3 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் முகமது முய்சு மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது. அவரது அறிவுறுத்தலின்பேரில், மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டர்களை மாலத்தீவில் இயக்கி வந்த இந்திய ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். இந்நிலையில், சமீப காலமாக மாலத்தீவு நிதி ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து. இந்தியாவுடனும் அதிபர் முய்சு நட்பு பாராட்டி வருகிறார். 3-வது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றபோது அந்த விழாவிலும் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில் 4 நாள் அரசு முறைப் பயணமாக மாலத் தீவு அதிபர் முகமது முய்சு டெல்லிக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தார். நேற்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய முகமது மூய்சு, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். பின்னர், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத் தீவு அதிபர் முகமது முய்சுவைச் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அதிபர் முய்சுவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:-

மாலத்தீவு இந்தியாவுடன் எப்போதும் நட்பு பாராட்டி வருகிறது. மாலத்தீவுக்கு ஏதாவது பிரச்சினை, மருத்துவ உதவி தேவையென்றால் எப்போதும் உதவும் முதல் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவே மாலத்தீவு பார்க்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாலத்தீவு பெரும் பங்கு வருகிறது. மாலத்தீவில் விமான நிலையத்தைத் தொடங்கி வைத்த இந்தியா, அங்கு 700 சமூக வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இந்தியா மற்றும் மாலத்தீவு உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. இது வரும் காலங்களிலும் தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறியதாவது:-

மாலத்தீவின் சமூக-பொருளா தார மற்றும் உள்கட்டமைப்பு மேம் பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மாலத்தீவுக்கு இந்தியா எப்போதுமே மதிப்புமிக்க நட்பு நாடாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தச்செயலையும் மாலத்தீவு எப்போதும் செய்யாது. இவ்வாறு அதிபர் முய்சு கூறினார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபர் முய்சு முன்னிலையில் இந்தியா, மாலத்தீவு இடையே ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.