பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் வரை ஓயமாட்டோம்: அமெரிக்கா!

ஹமாசிடம் பிடிபட்டுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த, தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மில்லர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென புகுந்த ஹமாஸ் அமைப்பு, ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு, அவர்களில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

இந்த மோதல் நடந்து நேற்றுடன் ஓராண்டாகிறது. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருவதுடன், இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதேபோன்று, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானும் சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, தாக்குதல் நடத்தியது. எனினும், கடந்த ஆண்டு முதல் நடந்து வரும் காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ராணுவ நிதியுதவியையும் வழங்கி வருகிறது. இந்த ஓராண்டில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 297 கோடி நிதியுதவியாக இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளது என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணையும் வரை அமெரிக்கா ஓய போவதில்லை. ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி 12 அமெரிக்கர்கள் உள்பட 254 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. அவர்களில் 7 அமெரிக்கர்கள் உள்பட 101 பேர் இன்னும் காசாவிலேயே உள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தொடங்கிய போரால், பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து இன்றும் அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.

பணய கைதிகளை வீட்டுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக, தொடர்ந்து பணியாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இதனால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்கள் பாதிப்பில் இருந்து விடுபடுவதுடன், போரும் ஒரு முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.