ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை 2 வகையான சோர்ஸ் உறுதி செய்துள்ளதாக ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் யார்? ரத்தன் டாடாவுக்கு எந்த மாதிரியான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது? எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது? என்பது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக நேற்று முன்தினமும் ரத்தன் டாடா உடல்நலம் குறித்த ஒரு தகவல் வெளியானது. அதாவது ரத்தன் டாடாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை ரத்தன் டாடா முற்றிலுமாக மறுத்தார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஐசியூ-வில் அனுமதி என வெளியான தகவலுக்கு ரத்தன் டாடா விளக்கம் அந்த அறிக்கையில், ‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என கூறியிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.