“ஹரியானா மாநிலத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் அலசி வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளோம்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இண்டியா கூட்டணியின் வெற்றி என்பது அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி. ஹரியானா மாநிலத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் அலசி வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளோம்.
எங்களுக்கு ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும் அயராத கடின உழைப்பை வழங்கிய எங்கள் சிங்கத் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம். உங்கள் குரலை தொடர்ந்து உயர்த்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றை (அக்.08) நடைபெற்றது. இதில் ஹரியானாவில் தனி பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராவார் என தெரிகிறது. அதே போல ஜம்மு – காஷ்மீரில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்க உள்ளார்.