காஷ்மீரில் கடத்தப்பட்ட ராணுவ வீரரை தேடும் பணி தீவிரம்!

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் இருவர் கடத்தப்பட்டனர். ஒருவர் தப்பிவந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது குறித்து விவரமறிந்த வட்டாரங்கள், “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கடத்தப்பட்டனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் தப்பிவந்துவிட்டார். மற்றொரு வீரரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட ராணுவ வீரரை தேடும் பணியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதனை ஒட்டி யூனியன் பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீரில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில் இப்படி ஒரு கடத்தல் சம்பவம் அங்கே நடந்துள்ளது.