ஹரியானா தேர்தலில் வெற்றிபெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் கணவுர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேவேந்தர் கட்யான். அதேபோன்று, பகதுர்கா தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தோற்கடித்தவர் ராஜேஷ்ஜூன். இவர்கள் இருவரும், மத்தியஅமைச்சரும், ஹரியானா மாநில தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் இல்லத்தில் ஹரியானா மாநில பாஜக தலைவர் லால் படோலி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

இதனிடையே, பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சாவித்ரி ஜிண்டாலும் பாஜக அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஹிசார் தொகுதி மக்களின் விருப்பத்தின்பேரில் இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனவே, எனது தொகுதி மக்களின் நலன் மற்றும் மேம்பாடு கருதி பாஜக அரசை ஆதரிப்பதென முடிவெடுத்துள்ளேன்” என்றார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லாப் ஆகியோர் சாவித்ரி ஜிண்டாலை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ஹரியானா தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, மூன்று சுயேச்சை எம்எல்ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதவுதெரிவித்துள்ளதையடுத்து அக்கட்சியின் பலம் 51-ஆக உயர்ந்து உள்ளது.