ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சீன நிறுவனத்திற்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பயனாளிகள் சுமார் 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, மொபைல் எண், பான் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் சீன இணையதளம் ஒன்றில் கடந்த மாதம் வெளியானது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவரங்களை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி, தங்களுக்கு விற்றதாக, இணையதள ஹேக்கர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பஞ்சாப்பைச் சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஹிமான்ஷு பதக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், இன்சூரன்ஸ் நிறுவன வாடிக்கையார்களின் உடல்நிலை உள்ளிட்ட முக்கிய விவரங்களை இந்நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு அதிகாரி பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு விற்றது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மேற்கொண்டு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது இணையதள நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மோசடி தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட முடியுமா என்பது தொடர்பாக வரும் 17 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.