காஷ்மீர் பேரவைக்கு 5 உறுப்பினர் களை நியமிக்க வகை செய்யும் துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90-ல் 49 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சி 42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ரவிந்தர் குமார் சர்மா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில், அதன் பேரவைக்கு 5 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இதை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “90 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் ஒரு கட்சிக்கு பெரும்பான்மைக்கும் சற்று கூடுதலாக 48 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக வைத்துக் கொள்வோம். துணைநிலை ஆளுநர் நியமிக்கும் 5 பேர் எதிர்தரப்புக்கு ஆதரவு அளித்தால், ஜனநாயக முறைப்படி பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைப்பதில் சிரமம் ஏற்படும். இது தேர்தல் நடைமுறையை கேள்விக்குறியதாக்கும். எனவே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள் கூறும்போது, “துணைநிலை ஆளுநருக்கு 5 உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கியதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இதுகுறித்து முதலில் உயர் நீதிமன்றத்தில் முறையிடுங்கள்” எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.