சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்.15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் 13 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் நிறைவுபெற்று வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.
நேற்று (அக்.14) தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.15) காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, தொடர்ந்து அந்த பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும். மேலும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதைத் தொடர்ந்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் வடதமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
அடுத்து வரும் 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (அக்.16) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்.17ம் தேதி, வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், அடுத்துவரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று 35 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும், வரும் 16 மற்றும் 17 தேதிகளில் வடதமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அக்.1 முதல் இன்று (அக்.15) வரையிலான காலக்கட்டத்தில் வடகிழக்கு பருவமழை 12 செ.மீட்டர் பதிவாகியுள்ளது.இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 7 செ.மீட்டர். இது இயல்பைவிட 84 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.
‘நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
நாளை (அக்.16) மிக அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்று முதல்வர் அறிவித்துள்ளார்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.