சென்னைக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
சென்னைக்கு அருகே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவாகத்தான் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இன்று(அக்.16) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 350 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் – தெற்கு ஆந்திர பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்று(அக். 16) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் மீண்டும் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று மக்கள் தேவையின்றி அச்சம் கொள்கின்றனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கரையைக் கடக்காமல், வலுவாக நிலைகொண்டுள்ளதால் சென்னையில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற பல கட்டங்கள் உள்ளன. எனவே புயலாக மாறுவது குறித்து இப்போது கணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.