வயநாடு இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சத்யன் மோக்கேரி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும் எஞ்சிய 38 தொகுதிகளில் நவம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்ள 47 சட்டசபை தொகுதிகளிலும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. வயநாடு லோக்சபா தொகுதியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வரும் 25 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் பெறப்படும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28-ல் நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 30 கடைசி நாள்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி ஆனார். உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி முன்னணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1987 முதல் 2001 வரை நாதாபுரத்தில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் சத்யன் மொகேரி. கடந்த 2014ல் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸின் எம்.ஐ.ஷானவாஸிடம் 20,870 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், அவருக்கு வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வயநாடு இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க இருக்கும் நிலையில், பாஜக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் கே.சுரேந்திரன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.