மின்தடை மற்றும் மின்பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக, மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மின்சாரத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ‘மின்னகம்’ சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மின்வாரிய தலைமையகமான சென்னையில், ‘ஷிப்ட்’ ஒன்றுக்கு 65 பேர் வீதம் 3‘ஷிப்டு’களாக மின்னகம் இயங்கி வந்த நிலையில், வடகிழக்குப் பருவமழையின்போது பொதுமக்கள் மின்தடங்கல் மற்றும் மின்சார பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை எவ்வித தொய்வுமின்றி தெரிவிக்கும் வகையில் தற்போது கூடுதலாக 10 பேர் ‘ஷிப்டு’களில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால், பொதுமக்கள் மின்சாரம் குறித்து புகார் அளிக்கும்போது, அழைப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். மேலும், மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகளுக்கான இடைவெளி தற்போது 20 நொடிகளாக இருப்பதை 10 நொடிகளாகக் குறைத்து, எவ்வித அழைப்பும் விடுபட்டு விடாமலும், அழைப்புகளுக்கு உடனடியாக இணைப்பு பெறவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்னகத்தில், மின்தடை குறித்து பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக சரி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களில் ‘ஷிப்டு’களில் இயங்கி வரும் மின்னகம் மூலமாகவும், சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் அலைபேசி மூலமாகவும் புகார் சரி செய்யப்பட்டதை உறுதி செய்யப்பட்ட பின்னரே புகார்கள் முடிக்கப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மின்வாரிய தலைவர் நந்தகுமார், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர் (பகிர்மானம்) இந்திராணி மற்றும் அனைத்து இயக்குநர்களும் உடனிருந்தனர்.