ஹரியானா மாநில முதல்வராக 2வது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்று கொண்டார். இதன் மூலம் ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு அமைந்துள்ளது. பிரதமர் மோடி, ஜெபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பாஜக, காங்கிரஸ், மாநில கட்சியான ஜேஜேபி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் பெரும்பான்மைக்கு அதிகமாகவே பாஜக மட்டும் 48 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எல்லாம் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில், பாஜக 3 வது முறையாக ஹரியானாவில் வெற்றி பெற்றது. தற்போது ஹரியானாவின் முதல்வராக உள்ள நயாப் சிங் சைனியே மீண்டும் அம்மாநில சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்ட நிலையில், நேற்று பஞ்ச்குலாவில் புதிதாக வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில், தற்போதைய முதல்வராக உள்ள நயாப் சிங் சைனி மீண்டும் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கவர்னர் மாளிகைக்கு சென்ற நையாப் சைனி சிங் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சியமைக்கு உரிமை கோரியுள்ளார். ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தான் ஹரியானா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றார். இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா நயாப் சிங் சைனிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 47 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் , 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பெரும்பான்மைக்கு தேவையான ஒரு சீட் இல்லாததால், 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜேஜேபி-ன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது பாஜக. இதையடுத்து நயாப் சிங் சைனி முதல்வரானார். இதையடுத்து தற்போது நடந்த தேர்தலிலும் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஹரியானாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றுள்ளார். தொடர்ந்து 3 வது முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.