காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றார். அவருக்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஸ்ரீநகரில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி ராஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பதவி ஏற்பு விழாவுக்குப் பிறகு ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். இருப்பினும், மாநில அந்தஸ்து இல்லாத அரசு அமைப்பது இன்று முழுமையடையாததாக உணரப்பட்டது. காஷ்மீர் மக்களிடமிருந்து ஜனநாயகம் பறிக்கப்பட்டது, மாநில அந்தஸ்து முழுமையாக மீட்கப்படும் வரை எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்ற உறுதிமொழியை இன்று புதுப்பிக்கிறோம்” என குறிப்பிட்டார்.