ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை கௌதமி!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக 3.16 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக கைதான மதுரையைச் சேர்ந்த ரமேஷ் சங்கருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை கௌதமி. நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தென்னிந்தியாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கௌதமி. இவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர் 3.16 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கௌதமி அளித்த புகாரில் அழகப்பன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அழகப்பனின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் மேலாளரான மதுரை கருப்பாயூரணி கங்கைபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் சங்கர் (55) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கர் தனக்கு ஜாமீன் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது கௌதமி நேரில் ஆஜரானார். அப்போது, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் சங்கர் இந்த மோசடியில் முக்கிய நபராக உள்ளதாலும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைத்து விடுவார் என்றும் கூறி ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த கௌதமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு நடந்தது அநீதி. அதனை எதிர்த்து நியாயத்திற்காக நான் போராடி வருகிறேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். நியாயத்திற்காக என்னுடன் துணையாக நிற்கிறார்கள். அதற்கு நான் என்றும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என விசாரித்தபோது பல விஷயங்கள் நடந்திருப்பது எனது கவனத்திற்கு வந்தது. அதனால் தான் இத்தனை இடங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நடவடிக்கை போய்க்கொண்டு இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்” இவ்வாறு உருக்கமாக தெரிவித்தார்.