காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன. இந்த சூழலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி ஜாகுர் அகமது பட், குர்ஷாத் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. அடுத்த 2 மாதங்களில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.