ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியது தொடர்பாக வழக்கில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தை ஏற்று சென்னை கமிஷனரின் பெயரை வழக்கில் இருந்து நீக்கி மாநில மனித உரிமை ஆணையத்தில் உத்தரவிட்டுள்ளது.
ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்கள் மொழியிலேயே பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அவரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மனித உரிமை ஆணையத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி இது தொடர்பாக விளக்கமளித்தார். அதில், சென்னை மாநகர காவல் ஆணையரின் பத்திரிகையாளர் சந்திப்பானது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசியதாகவும், சில ரவுடிகள் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளை பேசுபவர்களாக இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது என மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதம் வைத்தார். மேலும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதை வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது எனவும் அவர் வாதிட்டார். காவல்துறை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை ஆகியவற்றை அறிந்திருப்பதாகவும், எனவே காவல் ஆணையரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது என்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் விளக்கமளித்தார்.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்களுடைய வாதங்களை ஏற்று, மாநில மனித உரிமைகள் ஆணையமானது, இந்த வழக்கில் இருந்து காவல் ஆணையர் அருண் அவர்களின் பெயரை நீக்கியது. மேலும் அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.