உதயநிதி ஸ்டாலின் கிரிவலம் போயிருக்கிறார்: தமிழிசை சௌந்தரராஜன்!

“உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக்கொண்டு கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று திருவண்ணாமலை சென்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலை நகரினுள் வடக்கு மாட வீதியான பெரிய தெரு, மேற்கு கோபுர தெரு வழியாக, திருவண்ணாமலை – பெங்களூர் இணைப்பு சாலைக்கு வந்தார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கிரிவலப் பாதையில் அருணகிரி நாதர் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நுழைவு வாயில், சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட 36.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தின் அருகே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

மேலும், கிரிவலப் பாதையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்படும் இடங்களை, தன்னுடைய காரிலேயே வலம் வந்து ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின். கிரிவலப் பாதையின் சில இடங்களில் காரை விட்டு இறங்கி, நடந்து சென்றும் மக்கள் நலப் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கிரிவலம் சென்றதாக முன்னாள் ஆளுநரும், பாஜக நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-

தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அதிகப்படியான மக்கள் கிரிவலம் வரும் நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில் மகிழ்ச்சி. கடந்த முறை கிரிவலத்தில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். இன்று தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அவர்கள் கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார்கள் என்றவகையில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.” எனக் கூறியுள்ளார்.

சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். அப்போது அதுபற்றி தமிழக துணை முதல்வர் உதயநிதியிடம் அண்மையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி ஸ்டாலின், “யாருக்கு சொல்லி இருக்கார் என்று தெரியவில்லையே” என்று முதலில் கூறினார். ஒரு சில வினாடிகள் கழித்து, ‘Lets Wait And See’ என்று கூறிவிட்டுச் சென்றார்.