சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜ தீட்சிதர் என்பவரை பணி நீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவு பிறப்பித்தது. இதனை அறநிலையத் துறை ரத்து செய்த நிலையில், இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்லது அல்ல என்றும் தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள் எனவும் காட்டமாக கருத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை, தீட்சிதர்களின் தனிச் சொத்து போல கருதிக்கொண்டு ஆணவத்துடன் செயல்படுவதை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் நியாயமானவை, வரவேற்புக்குரியவை என்று தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதற்காக நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது என்றும், இதனை விசாரித்த இந்துசமய அறநிலையத்துறை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது. ஆனால், இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, தீட்சிதர்களின் விமர்சனத்திற்குரிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு வேதனை தெரிவித்துள்ளதாகவும், நடராஜர் கோயிலே தீட்சிதர்களின் சொத்து என நினைத்துக் கொண்டு, தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாக சுட்டிக்காட்டிய அவர் இந்த போக்கை விமர்சித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, “சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாத நிலைமையை மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் தீட்சிதர்களின் போக்கினால் பக்தர்களின் வருகை குறைந்து கோயில் பாழாகும் என்ற எச்சரிக்கையை நீதிபதியும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டிருப்பது முக்கியமானதாக மாறியுள்ளது” என்று கூறினார்.
மேலும், “காசி விசுவநாதர் கோயில் தனிச் சட்டம் மூலம் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது. அதே வகையில் தனிச் சட்டம் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகமும் முறைப்படுத்தப்பட வேண்டும். கும்பலாட்சி போக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.