நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை: உயர் நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “உயர் நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் அடிப்படை வசதிகள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தினாலும், திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. இது குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் விசாரணை செய்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்தும் அதிகாரிகள் அதனை நிறைவேற்றுவதில்லை. இதன்காரணமாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அதிகாரிகள் மீது தொடரப்படுகிறது. அதன் பிறகும் எந்தப் பணிகளும் மேற்கொள்வதில்லை. இதனால் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிக்காமல் இருப்பதால் நீதிமன்ற சுமையை அதிகப்படுத்தப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்ற மாட்டார்கள். உத்தரவுகளை நிறைவேற்ற துளி கூட முயற்சி செய்வதில்லை. இதில் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதை அரசும் அதிகாரிகளும் கொள்கையாகவே வைத்துள்ளனர். இதனை தலையெழுத்து என எடுத்துக்கொள்ள வேண்டியது தான். இது நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை கெடுக்கும் வகையிலும் நீதிமன்றத்தை நம்ப முடியாத சூழலையும் உருவாக்கி வருகிறது” என்று அதிருப்தி தெரிவித்ததுடன், மனு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மற்றும் தமிழக தலைமைச் செயலாளர், தமிழக உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.