பிரதமரின் கல்வித் தகுதி: அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

பிரதமரின் கல்வித்தகுதி குறித்து தெரிவித்த கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஏப்ரல் 8-ம் தேிதி தாக்கல் செய்த மனுவினை உச்ச நீதிமன்றத்தின் தனி அமர்வு தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டியது. மேலும், “நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த நடைமுறைக் கொண்டிருக்க வேண்டும்” தெரிவித்தது.

முன்னதாக இந்த அவதூறு வழக்கில் தங்களுக்கு எதிரான சம்மனை ரத்து செய்யக் கூறி சஞ்சய் சிங் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்களை குஜராத் உயர் நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி தள்ளுபடி செய்தது.

பிரதமரின் கல்வித்தகுதி குறித்த கருத்துக்களுக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அனுப்பப்பட சம்மனை ரத்து செய்யவேண்டும், அந்த சம்மனை மறுசீரய்வு செய்ய கோரிய தங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து இரண்டு அரசியல்வாதிகளும் (கெஜ்ரிவால், சஞ்சய் சிங்) குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.