பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா!

போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். அதனையடுத்து, காஸா மீதுஇஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக மாறியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையி்ல், மனிதாபிமான அடிப்படையில் 30 டன் நிவாரணப் பொருட்களை பாலஸ்தீனத்துக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதில்,மருந்துகள், அறுவை சிகிச்சைபொருட்கள், பல் மருத்துவத்துக்கான மருந்துகள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் அதிக எனர்ஜி கொண்ட பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமை (யுஎன்ஆர்டபிள்யூஏ) மூலம் இந்தியாவின் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை யுஎன்ஆர்டபிள்யூஏ மூலம் இந்தியா அனுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு காசா பகுதியில் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக உலக உணவுதிட்ட (டபிள்யூஎப்பி) அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது. காசா பகுதியில் மோதலை முடிவுக்கு கொணடு வருவதுடன் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அப்போதுதான் மனிதாபிமான உதவிகளை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் கொண்டு சேர்க்க முடியும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.