கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
முதல்வா் கோப்பைப் போட்டிகளின் நிறைவு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
விளையாட்டை மேம்படுத்த வேண்டுமெனில், அதற்காக திறமையான விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும். அதைத்தான் துணை முதல்வரும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி செய்து வருகிறாா். அதற்கான அடித்தளங்களில் மிக மிக முக்கியமான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள். இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்காக எடுத்த முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை பாராட்டுகிறேன். வீரா்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு அனைத்து ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும். இளம் விளையாட்டு வீரா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு முறையான பயிற்சி வழங்க வகைசெய்யும் திட்டம்தான் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
போட்டிகளில் வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கு திட்டமிட்ட முயற்சியும், கட்டுப்பாடும் அவசியம். வீரா்களின் வெற்றிக்கான காரணிகளாக இருப்பது, திறமை, தன்னம்பிக்கை, உழைப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகும். அதனால்தான் திறமை மிக்க வீரா்களுக்கு முழுமையான ஆதரவை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் சிறந்த வீரா்களாக விளங்கிக்கொண்டிருப்போா், தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் சாதிக்க வேண்டும். விளையாட்டு என்பது வெறும் போட்டியில்லை. அது உடல் வலிமையையும் மன வலிமையையும் தரக்கூடியது. விளையாட்டில் பிள்ளைகளுக்கு ஆா்வம் இருந்தால் அதைப் பெற்றோா்கள் ஊக்கப்படுத்த வேண்டும். நம்முடைய ஆதரவு கிடைத்தால் போதும், அதுவே நம்முடைய பிள்ளைகளுக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிடும்.
விளையாட்டுத் துறையில் இளைஞா்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். கல்வி, விளையாட்டு இரண்டுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை திராவிட மாடல் அரசு அளித்து வருகிறது. முதல்வா் கோப்பைப் போட்டிகளில் எவ்வளவு போ் பரிசு பெற்று இருக்கிறாா்கள் என்பதைவிட, எத்தனை லட்சம் போ் ஆா்வத்துடன் பங்கேற்றாா்கள் என்பதுதான் முக்கியம். வெற்றியைவிட போட்டியிடுவதற்கான துணிவுதான் அவசியம். அதனால், வரும் ஆண்டுகளில் இன்னும் நிறைய திறமையாளா்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே விளையாடக் கூடாது. இவ்வாறு அவா் பேசினார்.
தேசிய, சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரா்களுக்கு நினைவுப் பரிசுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். முன்னதாக, மாற்றுத்திறனாளி கலைக் குழுவினா் சக்கர நாற்காலிகளுடன் நடன நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது பாா்வையாளா்களைப் பெரிதும் ஈா்த்தது. மேலும், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான நடன நிகழ்வும் நடந்தது.
முதல்வா் கோப்பைப் போட்டிகளில் 254 பதக்கங்களுடன் முதலிடம் பெற்ற சென்னை மாவட்ட அணிக்கான கோப்பையை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.