இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ‘உரிய’ பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தததாக தெரிவித்துள்ள ஈரான். “எந்த ஒரு தாக்குதலுக்கும் ‘கடுமையான, சரிவிகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை’ கட்டாயம் கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது. ‘எங்கள் நாட்டு மக்களின் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் உரிமை என்பது எங்களுக்கு உண்டு. இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரான் தெரிவித்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசாவில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் லெபானான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது கடந்த 1-ம் தேதி 180-க்கும் மேற்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது நடத்தியுள்ளது. தெஹ்ரானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை ஈரான் உறுதி செய்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளியிட்ட வீடியோ பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், ஈரானில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணி திரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என தெரிவித்திருந்தார்.

பின்னர் மற்றொரு பதிவில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும். நாங்கள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம்” என்று தெரிவித்திருந்தார்.

தங்களின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை ஈரான் சனிக்கிழமை உறுதி செய்தது. இதுகுறித்து ஈரான் தரப்பு கூறும்போது, “எங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்றாலும், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சில இடங்களில் லேசான சேதம் உண்டானது. ஈரான் மீதான தாக்குதலுக்கு சரிவிகித எதிரிவினையாற்றப்படும்” என்று தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, வன்முறையின் சுழற்சியை உடைப்பதற்காக இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், “இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதன்மூலம் இந்த வன்முறையின் சுழற்சி மேலும் தொடராமல் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்காக இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்துகிறது. மேலும், மக்கள் வசிக்கும் இடங்களைத் தவிர்த்து, ராணுவ இலக்குகளையே இஸ்ரேல் குறிவைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதுமே எங்களின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.