தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டி, வி சாலை கிராமத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது உரையை பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர். விஜய் மாநாட்டில் பேசும்போது, ’கூத்தாடிகள்’ குறித்து ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசும்போது, கூத்தாடிகள் என்றால் கேவலமல்ல என்றும், அவர்கள் நாட்டையே வெகு சிறப்பாக ஆண்டிருக்கிறார்கள் என்றும் பேசினார். இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் எம்ஜிஆரும், ஆந்திராவில் என்டிஆரின் பெயரையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழலில் கட்சி மாநாட்டை வெகு சிறப்பாக நடத்திய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சமூக வலைதளம் மூலம் நேற்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் “ பல சித்தர்களும், துறவிகளும் வாழ்ந்த புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ள விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.