சாண்ட்விச், பர்கர், கிரில் சிக்கன், மோமோஸ் உள்ளிட்ட உணவுகளுடன் மையோனைஸ் சேர்த்து சாப்பிடுவது பலருக்கும் விருப்பமான ஒன்று. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மையோனைஸ் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ், சாண்ட்விச், ஷவர்மா, பர்கர், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், மோமோஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் மையோனைஸ் பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது கொழுப்பு நிறைந்தது. கடந்த சில நாட்களாக தெலுங்கானாவில் உணவு தரம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்தன. பலரும் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஹைதராபாத்தில் அண்மையில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக நடந்த ஆய்வில், இந்த உடல் உபாதைகளின் பின்னணியில் முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்திச் செய்யப்படும் மையோனைஸ் இருப்பது தெரியவந்துள்து. மையோனைஸ் சேர்த்து சாப்பிட்டவர்களுக்கே உடல் நல பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கடைகளில் மையோனைஸ் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.