நகர்ப்புற நக்சல்கள் அடையாளம் காணப்பட வேண்டும்: பிரதமர் மோடி!

நகர்புற நக்சல்களின் புதிய மாதிரி உருவாகி வருகிறது; அந்த சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலை அருகே நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் நாட்டை சீர்குலைத்து, அராஜகத்தை உருவாக்கி, உலகில் இந்தியா பற்றி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சாதியின் பெயரால் அவர்கள் நாட்டைப் பிரிக்க முயல்கிறார்கள். அவர்கள் வளர்ந்த இந்தியாவுக்கு எதிரானவர்கள்.

காடுகளில் நக்சலிசம் முடிவுக்கு வரும் நிலையில், நகர்ப்புறங்களில் நக்சலிசத்தின் புதிய மாதிரி உருவாகி வருகிறது. ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறுபவர்களைக்கூட இன்று நகர்புற நக்சல்கள் குறிவைக்கிறார்கள். நாம் நகர்புற நக்சல்களை அடையாளம் கண்டு; அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.

இந்தியாவின் ஒருங்கிணைப்பில் சந்தேகம் கொண்ட பலர் இருந்த போதிலும், சர்தார் வல்லபபாய் படேல் அதைச் சாத்தியமாக்கினார். நாடு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பட்டேலின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறது. நமது நாடு அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பதை நடைமுறைப்படுத்துவதை நோக்கி பயணிக்கிறது. அது நமது தேசத்தை வலிமைபடுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறோம். அது நமது ஜனநாயகத்தை வலிமைபடுத்தும்.

கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒருவர் அரசியலமைப்பின் மீது பதவி பிரமாணம் செய்துள்ளார். நமது அரசின் முயற்சியால் கடந்த பத்து ஆண்டுகளில் நக்சலிசம் அதன் இறுதி மூச்சில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ் அல்லது தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.