காஷ்மீரில் சட்டப்பேரவை சபாநாயகராக அப்துல் ரஹீம் ரத்தேர் தேர்வு!

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கடந்த செப்டம்பர் – அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 29 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதல்வராக தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கடந்த மாதம் 16-ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் புதிய சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கடந்த 2018 நவம்பரில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்றுபேரவை கூட்டம் நடைபெற்றது.

இதில் அவையின் முதல் அலுவலாக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவரும் 7-வது முறை எம்எல்ஏவுமான அப்துல் ரஹீம் ரத்தேர், சபாநாயகராக போட்டியின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் இடைக்கால சபாநாயகர் முபாரக் குல் வாழ்த்து தெரிவித்தனர். ரத்தேரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

பிறகு உமர் அப்துல்லா பேசுகையில், “இந்தப் பதவிக்கு இயற்கையான தேர்வாக ரத்தேர் இருக்கிறார். சிலநேரம் ஆளும் கட்சி வரிசையிலும் சில நேரம் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்து மக்கள் பணியாற்றிய ரத்தேர் இப்போது இந்த அவையின் பாதுகாவலர்” என்றார்.

புதிய சட்டப்பேரவையின் முதல்அமர்வு வரும் 8-ம் தேதி முடிவடைய உள்ளது. அவையில் இன்று துணைநிலை ஆளுநர் உரையாற்றுகிறார். மேலும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. நவம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது.