அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று (நவ.6) எக்ஸ் தளத்தில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பர் டொனால்ட் ட்ரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது முந்தைய பதவிக்காலத்தின் சிறப்புகளை நீங்கள் மீண்டும் செயல்படுத்தும்போது, இந்தியா – அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நான் எதிர்பார்க்கிறேன். நமது மக்களின் முன்னேற்றத்துக்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.