தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் கோபமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொருத்தமில்லாத கேள்வி என்று கூறி கையெடுத்துக் கும்பிட்டு கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, திருமாவளவன் ஸ்டாலின் சந்திப்பு, மது ஒழிப்பு மாநாடு என அப்பிரச்னை சற்று ஓய்ந்து முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, விஜயின் அரசியல் பிரவேசம், முதல் மாநாட்டால் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினருமே விஜயின் பக்கமாகத் திரும்பியுள்ளனர். அந்த மாநாட்டில் தனது கொள்கை, நிலைப்பாடு, அரசியல் எதிரி குறித்தெல்லாம் தெரிவித்திருந்தார் விஜய். அதிலும் குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி ஆட்சிகளுக்கும் பங்கு என்றும் விஜய் தனது மாநாட்டில் அனல் தெறிக்க பேசியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2024, 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். துறை வாரியாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. செய்து முடிக்கப்பட்ட பணிகள், செய்யப்பட வேண்டிய நிலுவையில் உள்ள பணிகள் குறித்தெல்லாம் அதிகாரிகள் விவரமான அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள். பயனாளிகள் விழிப்புணர்வுப் பெற வேண்டிய சில திட்டங்கள் குறித்து கூடுதலான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் சிறப்பாக நடந்த முடிந்துள்ளது. அடுத்த அமர்வில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் கேந்திர வித்யாலயா குறித்த கேள்விக்கு, நிலுவையில் தான் உள்ளது. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இப்போது வந்துள்ள ஆட்சியரிடம் இடம் தேர்வு செய்வது குறித்து வலியுறுத்தப்படும். 5 ஏக்கர் நிலம் இருந்தால் அதற்கான அனுமதியைப் பெற்றுவிட முடியும். அந்த முயற்சி கட்டாயமாக மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பொருத்தமில்லாத ஒரு கேள்வி என்று கூறி எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு சென்றார்.