தமிழக முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி காலமானார்!

தமிழக முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்தவர் கே.மலைச்சாமி. இவர் சென்னை அண்ணாநகரில், எண்.89, ஏசி பிளாக், 2-வது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். இவர் வயது முதிர்வு காரணமாக தனது இல்லத்தில் நேற்று காலமானார். இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நாளை (நவ.8) காலை 10 மணிக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் காலை 10.30 மணிக்கு அண்ணாநகர், புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9962080702 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு பிறந்த இவர், 1978-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். தமிழக வேளாண் துறை இணை இயக்குநராக தனது பணியை தொடங்கினார். பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குநர், வேளாண் துறை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர், தொழிலாளர் துறை ஆணையர், பொதுவிநியோகத்துறை ஆணையர் ஆகிய பதவிகளை வகித்தார். தொடர்ந்து கூட்டுறவுத்துறை செயலர், உள்துறை செயலர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். மேலும் 4 ஆண்டுகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராகவும் இருந்துள்ளார்.

பணி ஓய்வுக்கு பிறகு, அதிமுகவில் இணைந்த அவர் ராமநாதபுரம் தொகுதியில் 1999-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2004 முதல் 2010-ம் ஆண்டு வரை அதிமுக மாநிலங்களவை எம்பியாகவும் இருந்தார். இவரது மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.