உண்மையிலேயே மக்கள் நலனுக்காக நடத்தப்படும் கள ஆய்வா என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும்: பாஜக!

“மக்கள் நல களப்பணி” என்ற பெயரால் முதல்வர் ஸ்டாலின் தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை ஏமாற்றாமல், மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் வகையில் சமூக அக்கறையுடன், செயல்பட வேண்டும். அதே சமயம் இது தேர்தலுக்காக நடத்தப்படும் கள ஆய்வா, உண்மையிலேயே மக்கள் நலனுக்காக நடத்தப்படும் கள ஆய்வா என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் நிர்வாகம் மேம்பட, தமிழக முதல்வர் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் வேண்டுகோளை முழு மனதோடு ஏற்று, மாவட்டம் தோறும் நடக்கும் மக்கள் நல திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய, களப்பணிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், மற்றும் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய மாவட்டம் வாரியான, கள ஆய்வை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை பாஜக வரவேற்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டுள்ளனர். தற்போதாவது பாஜகவின் தூண்டுதலால் முதல்வர் களப்பணியாற்ற புறப்பட்டு விட்டேன் என்று விழித்துக் கொண்டதற்கு நன்றி. அதே சமயம் இது தேர்தலுக்காக நடத்தப்படும் கள ஆய்வா? உண்மையிலேயே மக்கள் நலனுக்காக நடத்தப்படும் கள ஆய்வா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

ஏனென்றால் தேர்தல் அரசியலுக்காக வாக்கு வங்கி அரசியலுக்காக, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது மீண்டும் தேர்தல் பணிக்கு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையிலே, தமிழக அரசின் சார்பாக, “மக்கள் நல களப்பணி” என்ற பெயரால் முதல்வர் ஸ்டாலின் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை ஏமாற்றாமல், மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்தப்படும் வகையில் சமூக அக்கறையுடன், தாயுள்ளத்துடன் செயல்பட வேண்டும்.

தமிழக முதல்வர் நேரடியாக, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாாக்க துறையின் மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து அவர்களுக்கான முழுமையான வழிகாட்டல் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், அனைத்து துறை நிர்வாகங்களும் ஒருங்கிணைந்து, அக்கறையுடன் ஆக்கபூர்வமான முறையில்மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழகத்தின் அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் பல்வேறு திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் செயல்படாத சூழ்நிலை கடந்த அதிமுக ஆட்சியிலும் மற்றும் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து வந்துள்ளது. இந்த சூழ்நிலையை உடனடியாக மாற்ற முதல்வர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்ற வேண்டும் என்று பாஜக சார்பாக கடந்த செப்டம்பர் (2024) 25-ம் தேதி தமிழக அரசுக்கு பாஜக சார்பாக எனது அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தமிழக பாஜகவின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த நேரடியாக மாவட்ட தோறும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்ற முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக செயல்பட்டால் தமிழக முதல்வரின் மக்கள் நல செயல்பாடுகளுக்கு பாஜக துணை நிற்கும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்டமாக அறிவித்து தமிழக அரசு கேட்கும் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியும் தாயுள்ளத்தோடு உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உரிய நிதியை வழங்கி மத்திய அரசின் திட்டமாக அறிவித்து தற்போது அதற்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. தமிழக பாஜகவை பொறுத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தலில் ஊழல் மலிந்த ஜனநாயகத்துக்கு எதிரான, மன்னராட்சி அரசியலுக்கு முடிவு கட்டும் விதமாக திமுகவை அப்புறப்படுத்தி பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

ஆனால் மத்திய பாஜக அரசை பொருத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் வாயிலாக தமிழகம் வளர்ச்சி பெற மத்திய பாஜக அரசின் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை ஊழலுக்கு இடம் கொடுக்காமல், திமுக அரசின் நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுத்த முழு முனைப்போடு செயலாற்றி வருகிறது. அதேபோல் மத்திய அரசின் மிகச்சிறந்த திட்டங்களான ஜல் ஜீவன் , ஆவாஸ் யோஜனா, மக்கள் மருந்தகம் மற்றும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அங்கமாக அறிமுகம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் “கோ ஒர்கிங் ஸ்பேஸஸ்” உள்ளிட்ட பிரதமரின் பல முன்மாதிரி மக்கள் நல திட்டங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழியில் அவரை பின்பற்றி தமிழகத்தில் செயலாற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அதேசமயம் தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை தன்முனைப்போடு பல்வேறு பெயர்களில் செயல்படுத்தும் போது பிரதமருக்கும் மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்களுக்கும் மகிழ்வுடன் தெரிவித்து இணைந்து செயலாற்றும் பொழுது மத்திய மாநில அரசின் உறவுகள் மேம்படையும். எனவே தமிழக முதல்வர் மத்திய அரசின் மீது வீண்பழிகளை சுமத்தி விளம்பர அரசியல் செய்யாமல், மத்திய அரசுடன் துணை நின்று தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும், மக்கள் நலத் திட்டங்கள் போய் சேரும் வண்ணம், தேர்தல் அரசியலை மறந்து மக்கள் நல அரசியலை முன்னெடுத்து மாவட்ட தோறும் தன்னுடைய களப்பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.