திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை: தமிழக அரசு மனு!

திருச்சி சூர்யாவுக்கு தற்போதுள்ள சூழலில் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் பங்கேற்று வருகிறேன். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தேன். இதனால் சீமான் என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இவர்கள் என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. என் வீட்டின் மீது கடந்த 2022-ல் சிலர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே எனக்கும், குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்; எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்க முடியாது. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் தேவை” எனத் தெரிவிக்கப்பட்டது.

சாட்டை துரைமுருகன் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பற்றியும், நாம் தமிழர் கட்சியினர் பற்றியும் அவதூறான செய்திகளை திருச்சி சூர்யா பரப்பி வருகிறார். எங்கள் மீது குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நீதிபதிகள், “மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக டிஜிபி, திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.